Friday, 19 January 2018

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலே தமிழகத்தில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்களின் மூலக் கோயிலாக உள்ளது. இத்தலத்தில் முதல் பூசை அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.

தேவாரம் பாடல் பெற்ற
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்


பெயர்
புராண பெயர்(கள்): திருவாலவாய்[1], சிவராஜ தானி, பூலோக கயிலாயம், கடம்ப வனம், நான்மாடக் கூடல், சிவ நகரம், துவாதசாந்தத் தலம், சமட்டி வித்தியாபுரம், கன்னியாபுரம்
பெயர்: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்: மதுரை
மாவட்டம்: மதுரை
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: சுந்தரேஸ்வரர் (சோமசுந்தரர், சொக்கலிங்கநாதர், சொக்கேசர், ஆலவாய் அண்ணல், சொக்கநாதர்)
தாயார்: மீனாட்சி (அங்கயற்கண்ணி, தடாதகை பிராட்டி, பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறை யவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள்)
தல விருட்சம்: கடம்ப மரம்
தீர்த்தம்: பொற்றாமரைக்குளம், வைகை ஆறு, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி
ஆகமம்: காரண ஆகமம்
சிறப்பு திருவிழாக்கள்: சித்திரைத் திருவிழா
பாடல்
பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு: திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை: 27
வரலாறு
தொன்மை: 2000 முதல் 3000 வருடங்கள்

மதுரை - பெயர்க்காரணம்


மதுரை – பெயர்க்காரணம்

பாண்டிய நாட்டின் பழைமையான தலைநகரமாக விளங்கிய மதுரை, இன்றைய தமிழகத்தின் முதன்மை நகரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. மதுரை என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை. தமிழ் என்றால் மதுரை; மதுரை என்றால் தமிழ். இங்ஙனம், இவை இரண்டும் பிரிக்க இயலாதவை. அதனாலேயே மதுரையைப் போற்றப் புகுந்த புலவர் எல்லாரும் தமிழோடு சேர்த்தே போற்றிப் புகழ்ந்தனர். தமிழ்கெழு கூடல் எனப் புறநானூறு போற்றியது. நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர், தாம் பாடிய சிறுபாணாற்றுப்படையில்,’தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை’ என்று குறித்தார். இளங்கோவடிகள், தமது நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில், ‘ஓங்குசீர் மதுரை’, ‘மதுரை மூதூர் மாநகர்’, ‘தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை’, ‘மாண்புடை மரபின் மதுரை’, ‘வானவர் உறையும் மதுரை’, ‘பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்’ எனப் பற்பல அடைமொழிகளால் மதுரைக்கு புகழ்மாலை சூட்டி மகிழ்ந்தார். ‘சேரநாடு வேழமுடைத்து, சோழநாடு சோறுடைத்து, பாண்டியநாடு முத்துடைத்து, தொண்டைநாடு சான்றோர் உடைத்து’ என்பன தமிழகத்தின் சிறப்பை உணர்த்தும்.

மதுரைக்கு கூடல் எனவும், ஆலவாய் எனவும் வேறு பெயர்கள் வழங்குகின்றன. நான்மாடக்கூடல் என்னும் பெயரே கூடல் என மருவியுள்ளது. திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால், நான்மாடக்கூடல் என்னும் பெயர் வழங்கலாயிற்று என்பர். ‘கன்னிகோவில்’, ‘கரியமால் கோவில்’, ‘காளிகோவில்’, ‘ஆலவாய்க் கோவில்’ ஆகிய நான்கு திருக்கோவில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்ததால், நான்மாடக்கூடல் என்னும் பெயரமைந்தது என்பாரும் உளர்.

வருணன், மதுரையை அழிக்க ஏழு மேகங்களை அனுப்பினான். அதைப்பற்றி இறைவனிடம் பாண்டியன் முறையிட, இறைவன் நான்கு மேகங்களை மதுரையைக் காக்க அனுப்பினார். அந்நான்கும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்தமையால் நான்மாடக்கூடல் என்னும் பெயர் ஏற்பட்டதாகப் பரஞ்சோதியார் கூறியுள்ளார். எந்நாட்டவரும் எவ்வூரினரும் வந்துகூடும் வளமான நகர் என்பதால், கூடல் என்னும் பெயர் பெற்றது என்பர். சங்கம் வைத்துச் செந்தமிழை வளர்க்க, புலவர் எல்லாரும் கூடியதால், கூடல் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் அறிஞர் கூறுவர்.

மதுரையை விரிவுபடுத்த எண்ணி, இறைவனிடம் அதன் எல்லையை வரையறுத்துத் தருமாறு வேண்டினான் பாண்டியன். இறைவன், தன் கையணியாகிய பாம்பிடம் எல்லையை வரையறுக்க ஆனையிட்டார். பாம்பு வாலை நீட்டி வலமாகத் தன் உடலை வளைத்தது. அவ்வாலைத் தனது வாயில் சேர்த்து மதுரையின் எல்லையை வகுத்துக் காட்டியது. அன்றுமுதல், மதுரைக்கு ஆலவாய் என்னும் பெயர் அமைந்ததாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. ஆலவாய் என்பது ஆலத்தை(விடத்தை) உடைய பாம்பினைக் குறிக்கும். மதுரையில் எழுந்தருளிய ஈசன், ஆலமர நிழலில் வீற்றிருந்ததால் ஆலவாய் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.
தென்மதுரையகத்தே சிறந்து நின்ற முதற்சங்கம் கடற்கோளால் அழிந்துபட, கபாடபுரத்தின்கண் இடைச்சங்கம் அமைந்தது. பின்னர், மற்றுமொரு கடற்கோளால் அந்நகரும் விழுங்கப்பட, கடைச்சங்கம் நிறுவப்பட்ட நிலப்பகுதியே இன்றைய மதுரை என்பர்.  மருத மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்தமையால் மருதை என வழங்கிய இடம் காலப்போக்கில் மதுரை என்றாகியதாம். கல்வெட்டில் மதிரை என்ற பெயர் காணப்படுகிறது. சங்ககால மதுரை, பூம்புனல் ஆறாகிய வையை ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. அம்மதுரையில் யானைமீது போர்வீரன் ஒருவன் உட்கார்ந்து, தன் கையில் மிக உயர்ந்த வெற்றிக்கொடியை ஏந்திச் செல்லும் அளவுக்குக் குன்றைக் குடைந்தாற் போன்ற வாயிலும், பாம்பென நெளிந்து செல்லும் பொறிகளையுடைய பெருமதிலும், அதனைச்சுற்றி ஆழ்ந்து அகன்ற அகழியும் இருந்துள்ளன. யானைக் கூட்டங்கள் அகழிக்குப் போவதற்கு ஏற்ற சுருங்கை(சுரங்க) வழியும் அமைந்திருந்தது. மதுரைநகரின் நடுவில் அண்ணல் கோவிலும் அதனைச் சுற்றி முறையாக ஒழுங்குற அமைந்த தெருக்களும் காண்பதற்குத் தாமரைப் பொகுட்டையும் அடுக்கடுக்கான இதழ்களையும் போன்று காட்சியளித்தன. இஃது அன்றைய தமிழர் நகரமைப்புக் கலையின் நுணுக்கத்தை உலகிற்குப் பறைசாற்றும் அடையாளமாகத் திகழ்கின்றது.

சிவன், திருமால், பலராமன், செவ்வேள், ஐயை, கொற்றவை, சிந்தாதேவி எனக் கடவுளர் பலருக்கும் கோவில்கள் இருந்துள்ளன. அரண்மனை, பல்வேறு தெருக்கள், அறங்கூறு அவையம், அம்பலங்கள், மன்றங்கள், அறக்கூழ்சாலைகள், நாளங்காடி அல்லங்காடி முதலியன மதுரையில் இருந்துள்ளன.