நாடக இலக்கியம்
நாடு + அகம் = நாடகம்; உள்ளம் விரும்புமாறு ஆடலும் பாடலும் கொண்டு விளங்குவது நாடகம் ஆகும். ‘இல்லது, இனியது, நல்லது என்று புலவரால் நாட்டப்படுவது நாடகம்’ என்பார் தொல்காப்பிய உரையாசிரியர். கூத்தரும் விறலியரும் நாடகக் கலைஞர்கள் ஆவர்.1.2.1 காலந்தோறும் நாடகம்
தொல்காப்பியத்தில் நாடக வழக்கு என்னும் சொல்லாட்சி காணப் பெறுகின்றது. பரதம், அகத்தியம், முறுவல், சயந்தம், செயிற்றியம், குணநூல், பஞ்சமரபு, பரத சேனாபதீயம், மதிவாணர் நாடகத் தமிழ் போன்ற நாடக இலக்கண நூல்கள் பண்டைக் காலத்தில் இருந்தமையைச் சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையின்வழி அறியலாம். கலித்தொகை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் நாடகக் கூறுகளை நன்றாகக் காணமுடிகின்றது.
கலைகள் காமத்தை மிகுவிப்பன என்ற எண்ணமுடைய சமணர்களால் களப்பிரர் காலத்தில் நாடகம் தன் செல்வாக்கை இழந்தது. இராஜராஜசோழன் காலத்தில் ராஜராஜேஸ்வர விஜயம் என்னும் நாடகம் இயற்றப்பட்டு நடிக்கப் பெற்றது. பிறகு கி.பி.17ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து மீண்டும் நாடகங்கள் புத்துயிர் பெறத் தொடங்கின. பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம் முதலியன எளிய நடையில் அமைந்து மக்களை மிகவும் கவர்ந்தன.
கி.பி.18ஆம் நூற்றாண்டளவில், இராமநாடகக் கீர்த்தனை, நந்தனார் சரித்திரக் கீர்த்தனை போன்ற நாடகங்கள் மிகப் புகழ் பெற்றன.
கி.பி.19ஆம் நூற்றாண்டு தொடங்கி, நாடகம் மிகுந்த வளர்ச்சிபெறத் தொடங்கியது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, ஆங்கில மொழியின் இரகசிய வழி (The secret way) என்னும் நூலைத் தழுவி, மனோன்மணீயம் என்னும் நாடகத்தை யாத்தளித்தார். இதனைப் போன்று அடுத்தடுத்துக் கவிதை நாடகங்கள் பல தமிழில் எழுந்தன. பிறகு, உரைநடை உரையாடல்கள் கொண்ட நாடகங்கள் பலவும் தோன்றலாயின. பிற்காலத்திய திரைப்படத் தோற்றத்திற்கு நாடகமே முன்னோடி என்பது யாவரும் அறிந்த ஒன்றேயாகும். இன்றும், தொலைக்காட்சிகளில் நாடகத்தின் செல்வாக்குச் சிறந்து விளங்கி வருவது கண்கூடு.
காசி விசுவநாத முதலியார், திண்டிவனம் ராமசாமி ராஜா, தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பரிதிமாற் கலைஞர், பம்மல் சம்பந்த முதலியார், நவாப் ராஜமாணிக்கம், எம்.ஆர்.ராதா, ஆர்.எஸ்.மனோகர் ஆகியோர் நாடகத் துறையில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
1.2.2 நாடக அமைப்பு
நாடகத்தில் உரையாடல் முதலிடம் பெறும். பங்கு பெறுவோர் கதாபாத்திரங்கள் எனப் பெறுவர். நிகழ்ச்சி நடைபெறும் இடம், காலம், சூழல் ஆகியனவும் குறிக்கப் பெற வேண்டும். பேசுவோருக்கேற்ற உணர்ச்சிக் குறிப்புகள் (மெய்ப்பாடு) வசனத்தில் ஆங்காங்கே அடைப்புக் குறிக்குள் சுட்டப் பெறுவதும் உண்டு.
நாடகம், பொதுவாக, தொடக்கம், வளர்ச்சி, உச்சம், வீழ்ச்சி, முடிவு என்று ஐந்து கூறுகளையுடையதாக இருக்கும். இக்கூறுகளாகிய பெரும்பிரிவுகள் அங்கங்கள் என்னும் பெயரில் விளங்கும். இவற்றில் களன் அல்லது காட்சி என்னும் சிறு பிரிவுகள் அமையும்.
இன்பியலாகவோ, துன்பியலாகவோ நாடகங்கள் முடிவு பெறும். துன்பியல் முடிவுகளே பெரும்பாலும் வரவேற்புப் பெறும். நாடகம் இத்தனை பக்கங்கள் அல்லது இவ்வளவு கால நேரம் கொண்டதாக விளங்க வேண்டும் என்றெல்லாம் எந்த வரையறையும் இல்லை. படிக்கத்தக்கன, நடிக்கத்தக்கன, படிக்கவும் நடிக்கவும் தக்கன எனப் பல வகைகளில் நாடகம் புனையப் பெறும். நாடகம் நடிக்கப் பெறுங்காலத்து நடிப்பவரின் மெய்ப்பாடு, குரல் அழுத்த வேறுபாடு முதலியன வசனத்திற்கு மேலும் மெருகூட்டிக் காண்போரை விரைந்து சென்றடைகின்றன எனலாம். மேடை நாடகம், வானொலி நாடகம், தொலைக்காட்சி நாடகம், படிப்பறை நாடகம் எனப் பலவாகக் கலைஞரின் நிலைக்கேற்ப நாடகங்கள் புத்தம் புதியனவாகப் படைத்தளிக்கப் பெற்று வருகின்றன.
No comments:
Post a Comment