Wednesday, 10 January 2018

ஒக்கி புயல்


 

ஒக்கி புயல் 


புதுதில்லி: கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ள புயலுக்கு ‘ஒக்கி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை வங்காளதேசம் வழங்கியுள்ளது. வங்காள மொழியில் ‘ஒக்கி’ என்றால் கண் என்று அர்த்தமாம்.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை தீவிரமாகி கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதியில் ஒக்கி புயலாக மையம் கொண்டிருந்ததை அடுத்து தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளத்தின் ஒரு பகுதியிலும் பலத்த சூறாவளியுடன் பெய்த கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கிப்போனது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் 4 பேரும், கேரளத்தில் 4 பேரும் ஆக மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அடுத்த புயலுக்கான பெயரை இந்தியா வழங்கியுள்ளது. உலக வானிலை ஆய்வு அமைப்பும் மேலும் 2 அமைப்புகளும் இணைந்து 2000-ஆம் ஆண்டில் புயலுக்கு பெயர் வைக்கும் நடைமுறையை கொண்டுவந்தன. இதன்மூலம் உலகளவில் வானிலை முன்னறிவிப்பாளர்கள், பொதுமக்கள், வானிலை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு தொடர்புகொள்ள வசதியாகவும், எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடுவதற்கு உதவியாகவும் இந்த முறை கொண்டுவரப்பட்டது. உலகளவில் 9 கடல் மண்டலங்களில் உள்ள நாடுகள் இந்த பெயர்களை வழங்குகின்றன.

இப்போது கன்னியாகுமரி அருகே உருவாகி தாக்கியுள்ள புயலுக்கு ‘ஒக்கி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது வங்கதேசம் தந்த பெயராகும். வங்காள மொழியில் 'ஒக்கி' என்றால் கண் என்று அர்த்தமாம்.

அடுத்த புயலுக்கு ‘சாகர்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது இந்தியா தந்த பெயராகும். ஹிந்தி வார்த்தையான 'சாகர்' என்றால் கடல் என்று அர்த்தம் என தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரியை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஒக்கி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று லட்சத்தீவுகளை நோக்கி நகர்ந்து இருப்பதாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மையத்தால் உருவான இந்தப் புயல் லட்சத்தீவில் மையம் கொண்ட பின் கடலிலே வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் கடல் சூழல் சாதகமாக இருந்தால், வட கிழக்காக கோவா, மும்பை கடற்கரை நோக்கி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகரும் என்று அமெரிக்காவின் சர்வதேச புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தைத் தொடர்ந்து கேரளாவிலும் ஒக்கி புயலால் பலத்த மழை பெய்து வருகிறது. கேரளாவில் திருவனந்தபுரம், ஆலப்புழை, கோட்டயம், பத்தனந்திட்டா, இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment